Thursday, September 8, 2016

மாநிலக் குழுக் கூட்டம் 28.8.16 அன்று திருச்சியில் ப.மாணிக்கம் இல்லத்தில் நடைபெற்றது.


பேரன்புடையீர்,
            வணக்கம்.
நமது அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் மாநிலக் குழுக் கூட்டம் நமது சங்கத்தின் மாநில  துணைத் தலைவர்  
ந. தம்பிராஜா தலைமையில்  28.8.16 அன்று திருச்சியில்  ப.மாணிக்கம் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில்  மாநில  பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் முன்வைத்த வேலை அறிக்கை விவாத த்திற்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாநிலச் செயலாளர்கள் இளசை எஸ்.எஸ்.கணேசன், ஜி.சத்தியபாலன், மாநில துணைத் தலைவர்  நாகை செல்லப்பன், விருதுநகர் மாவட்டத் தலைவர் ஆர்.பாலச்சந்திரன் சேலம் மாவட்டச் செயலாளர் எஸ். சிவராமன்,விருதுநகர் நிகரன் ஆசிரியர் பி.பாஸ்கரன்,விருதுநகர் பயணம் ஆசிரியர் ஆர்.சுந்தராஜன் , அம்பத்தூர் சு. நாச்சியப்பன்  பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் என்.கண்ணதாசன்,நாகை மாவட்ட வழக்கறிஞர் சுந்தரையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திருச்சி புறநகர் மாவட்ட சி.பி.ஐ செயலாளர் கணேசன், மாநகர துணைச் செயலாளர் திருச்சி  சிவா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள்  நிறைவேற்றுப் பட்டன.
  • தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும்.மக்கள் நல்வாழ்வுத் துறையில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்புவதோடு ,கொசு ஒழிப்பு பணிக்கு போதிய ஊழியர்களையும் தமிழக அரசு நியமிக்க வேண்டும்.இந்தப் பணிகளுக்காக நியமிக்கப் பட்ட ஊழியர்களை இதர ப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.

  • மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

  • இந்திய மருத்துவக் கழகத்தை கலைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.மருத்துவக் கவுன்சிலை சீரமைத்திட, வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வைத்திட  உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

  • தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கும், தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழக  இடங்களுக்கும்  தமிழக அரசே ஒற்றைச் சாளர முறையில் கேரள அரசை போல் மாணவர் சேர்க்கையை நடத்திட  வேண்டும்.

  • நாடு முழுவதும் தலித்துகள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இந்துத்துவ மதவாத சக்திகளால் அதிகரிக்துள்ளது.தலித்துகள் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்களை முறியடிக்க அனைத்து ஜனநாயக,மதச்சாற்பற்ற முற்போக்கு சக்திகளும் முன்வர வேண்டும் .தலித்துகள், முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தும் பிற்போக்கு சக்திகள் மீது கடும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்திட வேண்டும்.

  • சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளாவின் முயற்சியையும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடகத்தின் முயற்சியையும், பாலாறின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் ஆந்திர அரசின் முயற்சியையும் மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்திட வேண்டும்.

  • பெண்களுக்கு எதிரான கொலை வெறி தாக்குதல்கள் சென்னை உட்பட  தமிழகத்தில்  , பல்வேறு இடங்களில் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.இத்தகையத் தாக்குதல்களை தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

  • அனைத்து துறைகளிலும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிப்பதை கைவிட வேண்டும்.

  • ``இந்தியாவில் சாதி- வர்க்கம் ’’ என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி சென்னையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
 2016 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அனைத்து மாவட்டங்களும் தங்களால் ஏற்றுக்கொள்ளபட்ட  கருத்தரங்க  நிதியை மாநில மையத்திற்கு  வரும் அக்டோர் 15 க்குள் வழங்கிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

எண்
மாவட்டம்
கருத்தரங்க பிரதிநிதிகள்
கருத்தரங்க நிதி- ரூபாய்
1
வட சென்னை
20
3000
2
தென் சென்னை
20
5000
3
காஞ்சிபுரம்
30
5000
4
திருவள்ளூர்
50
10000
5
சிதம்பரம்
20
5000
6
நாமக்கல்
15
5000
7
கன்னியாகுமரி
5
2000
8
தஞ்சாவூர்
15
5000
9
விருதுநகர்
10
5000
10
திருச்சி புறநகர்
5
1000
11
கோவை
10
5000
12
சேலம்
4
2000
13
இராமநாதபுரம்
2
1000
14
பெரம்பலூர்
5
1000
15
திருச்சி மாநகர்
5
1000
16
நாகை
5
5000
17
டாக்டர்கள் சங்கம்
5
5000

இதர மாவட்டங்கள்  ஒவ்வொன்றும் 5 பிரதிநிதிகள் மற்றும் ரூ 1000 நிதி வழங்கிட  வேண்டும்.
கருத்தரங்கம் எழும்பூ,ர் பாந்தியன் சாலையில்  , மியூசியம் எதிரில் உள்ள  ``இக்ஸா ‘’மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கும் வசதி ஏற்பாடு செய்வதற்கு வசதியாக , கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அக்டோபர் 5 ஆம் தேதிக்குள்  மாநில மையத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
இப்படிக்கு,
டாக்டர் .ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர், AIPF.
9940664343

Wednesday, March 23, 2016

மாவட்டக்குழுக்கூட்டம்

அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் விருதுநகர் மாவட்டக்குழுக்கூட்டம் சாத்தூரில் எழுத்தாளர் தனுஷ்கோடி நினைவு மருத்துவமனையில் 20.3.15 அன்று நடைபெற்றது. 

ஏ.ஐ.பி.எஃப் - ன் விருதுநகர் மாவட்டத் தலைவர் ஆர். பாலச்சந்திரன் கூட்டத்திற்கு தலைமைவகித்து பேசுகிறார்.

திரு.முனியப்பன், சி.பி.ராஜேந்திரன், பயணம் சுந்தர்ராஜன், பாலச்சந்திரன், வேல்முருகன், ஏ.ஐ.பி.எஃப் - ன் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், மாநிலச் செயலாளர் டாக்டர் த.அறம், நவனீதகிருஷ்ணன், ராஜேந்திரன், ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thursday, March 17, 2016

சாதிகடந்து மணப்போரை சாகடிப்பது நியாயமா?

மீண்டும் ஒரு சாதி ஆணவப் படுகொலை நடைபெற்றுள்ளது.

உடுமலைப்பேட்டையில் நடைபெற்றுள்ள இக்கொலை மனதை பதறச்செய்கிறது.வெட்கப்பட வைக்கிறது.

வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து , சாதி கடந்த மணம் புரிந்த காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டுள்ளார் தலித் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் சங்கர்.

கடந்த ஆண்டு வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்த தற்காக கோகுல் ராஜ் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் படுகொலை செய்யப்பட்டார்.

திவ்யா என்ற வேறு சாதி பெண்ணை திருமணம் செய்த காரணத்திற்காக இளவரசன் என்ற தலித் இளைஞர் தர்மபுரியில் மர்மமான முறையில் இறந்தார்.

இந்த நிகழ்வுகளுக்கு இடையில் இதை போன்று ஏராளமான இறப்புகள் நடைபெற்றுள்ளன.பல வன்முறை நிகழ்வுகள் தாக்குதல்கள் நடந்துள்ளன.

சாதிகடந்து காதல் மணம் புரியும் இணையர்களுக்கு எதிரான இத்தகைய தாக்குதல்கள் கொலைகள் நமது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

தனது வாழ்க்கைத் துணையை அமைத்துக்கொள்ளும் தனிநபர் சுதந்திரத்தை பறிக்கிறது.

நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது .

நம்மை வேதனைப் படுத்துகிறது.
தலைகுனிய வைக்கிறது.
காதல் மனிதக் குலத்திற்கு மட்டுமே வாய்த்த பண்பு.

உணர்வு நிலையின் உச்சக்கட்ட வெளிப்பாடு.இதர உயிரினங்களுக்கு இயற்கையிலிருந்து பெறப்பட்ட பாலியல் உணர்வு (காமம் ) மட்டுமே உண்டு. காதல் இல்லை.ஆனால், மனிதனுக்கு மட்டும் தான் இயற்கையிலிருந்து பெறப்படும் உணர்வுகளோடு சமூக ரீதியாக பெற்ற காதலும் உண்டு.


காதலைப்பற்றிய மதிப்பீடு அவன் வாழும் சமுகத்தின் கலாச்சார வளர்ச்சி மட்டத்தை பொறுத்தே அமைகிறது.
இந்தப் படுகொலைகள் நமது கலாச்சாரம் எவ்வளவு பிற்போக்காக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

சாதியக் கலாச்சாரம் இயல்பான காதலுக்கு சாவுமணி அடிக்கிறது.
``காதலுக்கு சாதியில்லை மதமுமில்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே ‘’என்ற பாடலின் இனிமையை உணராதவர்கள் இருக்க முடியாது.ஆனால்,சாதி மத பேதம் நமது வாழ்க்கையையே பறித்து விடுகிறது.
``ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே /அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்’’.என்று பாடிய பாரதி ,காதல் செய்வீர் என உலகத்தாருக்கேக் கூறினான். காதலினால் கவலை தீர்க்கும் கலவி உண்டு, கவிதை உண்டு ,கானமுண்டு, சிற்பமுதற் கலைகள் உண்டு, என சொந்த சாதியிலேயோ,மதத்திலேயோ.இனத்திலேயோ காதலி என்று சொல்லவில்லை. விசாலப்பார்வையோடு உலகத்தாருக்கே வேண்டுகோள் விட்டான்.
``சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்றான்.``சாதி இரண்டொழிய வேறில்லை ‘’என்றான்
`நிகரென்று கொட்டு முரசே- இந்த 
நீனிலம் வாழ்பவரெல்லாம் 
தகரென்று கொட்டு முரசே- பொய்மைச் 
சாதி வகுப்பினை யெல்லாம்’ என்றான்
அத்தகைய பாரதி பிறந்த தமிழ் மண்ணில் இன்று சாதி கடந்த மணம் புரிந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.
இதற்குக் காரணமான சாதி எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது?எப்படி நீடிக்கிறது ? எப்போது ஒழியப்போகிறது ?என்றக் கேள்விகள் நமது காதுகளை துளைத்துக் கொண்டிருக்கிறது.
சாதிகளின் தோற்றத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது.
பண்டைய பழங்குடி அழிவிலிருந்து ,வருண – சாதிகள் வேளாண்மைச் சமூகம் உருவானபோது சமூக வேலைப்பிரிவினையின் காரணமாக சாதிகள் தோன்றின.வர்க்கங்களின் தோற்றம், அரசு மற்றும் மதம் ஆகியவற்றின் ஆக்கத்தோடு சாதிகளின் தோற்றம் தொடர்புடையது.
இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவிய வேறுபாடுகள் காரணமாக ,இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் சாதிகள் தோன்றி பரவிவிடவில்லை.இன்றும் பழங்குடிகள் வாழும் பகுதிகளில் சாதி அமைப்பு உருவாகவில்லை.
இந்த சாதிகள் நீடித்து இயங்குவதற்கு அகமணத்திருமண முறை முக்கிய காரணியாக திகழ்கிறது.பரம்பரைத் தொழிலும், ஒவ்வொரு சாதிக்கும் உரிய தனித்த கலாச்சாரமும்,வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் சாதி நீடித்து நிலைத்து நிற்க உதவின.
சாதிப் படிநிலையின் அடிப்படையில் உருவான ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை கொடுமைகள் இந்திய சமூகத்தில் நிலவும் மிகப் பெரிய மனித உரிமை மீறல்களாக உள்ளன.
இந்திய சமூகத்தில் எந்த நபரும் தனிநபராக இல்லை.ஏதேனும் ஒரு சாதியை சார்ந்தவராகவே உள்ளார்.சாதி என்ற கடவுச் சீட்டு இல்லாமல் இந்தியாவில் யாரும் பிறக்கமுடியாது என்ற நிலையே நீடிக்கிறது.அது தனிநபர் சுதந்திரத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.
இன்றைய சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலை ஆண் பெண் இருவரும் ஒன்றாக சேர்ந்து படிக்கும்,பணிபுரியும் வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.இதனால் சாதி கடந்த காதல்கள் அதிகரித்துவருகின்றன.
சாதிகடந்த காதல் திருமணங்கள் சாதி இருத்தலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் ,பிற்போக்கு சாதிய சக்திகள் , இவற்றுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றன.
சாதியை அடிப்படையாக க் கொண்ட அரசியல் கட்சிகள், வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காக சாதி கடந்த திருமணங்களை அரசியலாக்கி வருகின்றன.
`` ஜீன்ஸ் பேண்டும் ,கூலிங் கிளாசும் போட்டுகிட்டு எங்கள் சாதி பெண்களை காதல் வலையில் சிக்க வைக்கின்றனர்… நாடக க் காதலை அரங்கேற்றுகின்றனர்’’ என தலித் இளைஞர்கள் மீது சில தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தலித்துகளை இழிவு படுத்துவதோடு, ஜீன்ஸ் பேன்டுக்கும், கூலிங்கிளாஸுக்கும் தங்கள் பெண்கள் மயங்கிவிடுவதைப் போன்று கூறுவதின் மூலம் தங்கள் சமூகப் பெண்களை தாங்களே இழிவு படுத்துகின்றனர்.தலித் விரோத மனப்பான்மையுடன் ஆணாதிக்க மனோபாவமும் சேர்ந்தே இதில் வெளிப்படுகிறது.
காதல் மற்றும் சாதி கடந்த திருமணத்தை முன்னிறுத்தி தலித்துகளுக்கு எதிராக தலித் அல்லாதோரின் கூட்டணியை உருவாக்கும் முயற்சி தமிழகத்தில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. வாக்கு வங்கி அரசியலே இதன் நோக்கம். தலித்துகளுக்கு எதிரான கடுமையான விஷமத்தனமான விமர்சனங்கள் முனவைக்கப்பட்டன.
இதனால் ,தலித்துகளுக்கு எதிரான மனநிலை இதர சமூகத்தினரிடம் உருவாக்கப் பட்டுள்ளது.இது தலித்துகளுக்கு எதிரான தாக்குதலையையும் , சாதிகடந்த திருமணம் செய்து கொண்டோருக்கு எதிரான தாக்குதலையும் அதிகரித்துள்ளது.அதன் வெளிப்பாடுகள் தான் கோகுல்ராஜ் கொலையும், சங்கர் கொலையும்.இத்தகைய கொலைகளுக்கு சாதிய சக்திகளே பொறுப்பேற்க வேண்டும்.
சாதி கடந்த திருமணத்தை முன்னிருத்தி தலித்துகளுக்கு எதிராக தலித் அல்லாதோரை அணி திரட்ட முயன்ற சக்திகள் , முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒன்று பட்ட செயல்பாட்டால் மக்கள் மன்றத்தில் தனிமை பட்டுப்போயுள்ளன. இதற்குக் காரணமாக அத்தகைய சக்திகள் கூட தலித் இளைஞர் சங்கரின் படுகொலையை கண்டிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.இது சாதிகடந்த திருமணத்திற்கு எதிராக செயல்படும் சாதிய சக்திகளுக்கு எதிராக ,முற்போக்கு சக்திகள் நடத்திய கருத்தியல் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்திய சமூகத்திற்கு கேடு பயக்கும் அதன் முன்னேற்றத்தை தடுக்கும் முக்கியக் காரணியாக இருப்பது சாதியும் ,தீண்டாமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இந்த சாதியையும் தீண்டாமையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
சாதி ஒழிப்பு .தீண்டாமை ஒழிப்பு மற்றும் தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய டாக்டர் அம்பேத்கர் ,`` சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி கலப்பு மணம் தான்’’ என்று கூறினார்.
லாகூரில் நடக்க இருந்த ஜாத்- பட் – தோடக் மண்டலுக்காக டாக்டர் அம்பேத்கார் தயாரித்த `` சாதி ஒழிப்பு’’ குறித்த உரையில் அவர் கூறுகிறார்``சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி,கலப்பு மணம்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.இரத்தக் கலப்பின் மூலம் தான் உற்றார் உறவினர் என்ற உணர்வு ஏற்படும்.இந்த உறவு உணர்வு ஏற்பட்டு வலுவடைந்தாலன்றி ,சாதியினால் ஏற்பட்டிருக்கும் வேற்றுமை உணர்வு- ஒருவருக்கொருவர் அந்நியராக நினைப்பது –மறையாது.இந்து அல்லாதவர்களைவிடஇந்துக்களிடையே கலப்புமணம் சமூக வாழ்வில் அதிக ஆற்றல் வாய்ந்த அம்சமாக இருக்கும்…….சமூகம் துண்டுப்பட்டுச் சிதறிக் கிடைக்கும் நிலையில் திருமணம் ஒரு பிணைப்புச் சக்தியாக வருவது அவசரத்தேவையாகிறது.சாதியை உடைப்பதற்கு உண்மையான தீர்வு கலப்புமணமே .வேறு எதுவும் சாதியை கரைக்க முடியாது.உங்களுடைய ஜாத்- பட்- தோடக் மண்டல் இந்த வழியை பின்பற்றுகிறது.இது சாதியை நேர் எதிர் நின்று தாக்கும் தாக்குதலாகும்’’
டாக்டர் அம்பேத்கரின் கருத்திலிருந்து சாதி ஒழிப்பில் கலப்பு மணத்தின் முக்கியத்துவத்தை அறிய முடியும்.எனவே தான் சாதிய அமைப்புக்கள் சாதி கடந்த கலப்புமணங்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுகின்றன.
சாதி கடந்த காதல் கலப்பு மணம் புரிவோர் தங்களின் காதல், விருப்பங்கள் நிறைவேறுவதற்காக மணம் புரிந்தாலும் அதில் மிகப்பெரிய சமூகப் பயன் இருக்கிறது. சாதி என்ற கோட்டையை தகர்க்கும் வெடி மருந்துதாக அது இருப்பதுதான் அந்த சமூகப் பயன்.
சாதி கடந்த திருமணங்களை ஊக்கப்படுத்துவது அரசுகளின் ,சமூகத்தின் கடமை !
அதுவும் தமிழக அரசுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.ஏனெனில் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பிற மாநலங்களை ஒப்பிடும் பொழுது சாதிகடந்த திருமணங்கள் குறைவாக வே நடக்கிறது.மொத்த திருமணத்தில் தமிழகத்தில் கலப்புமணம் 2.5 விழுக்காடுதான். ஆனால் இந்த எண்ணிக்கை கோவாவில் 26.6,பஞ்சாப் 22.3,கேரளா 21.3 கர்நாடகம் 16.4 என உள்ளது.பல மாநிலங்களில் தமிழகத்தை விட கலப்புமணங்கள் அதிகம் நடக்கின்றன.
• சாதிகடந்த திருமணம் செய்து கொண்ட இணையரில் ஒருவர் பட்டியலினத்தினராகவோ அல்லது பட்டியல் பழங்குடியினராகவோ இருந்தால் அரவகளது வாரிசுகளை சாதியற்றோர் என தகுந்த முறையில் வகைப்படுத்தி அவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை கல்வி வேலைவாய்ப்புகளில் 0.5 விழுக்காடு வழங்கிட வேண்டும் என்ன நீதி அரசர் வெங்கடாச்சலையாவின் பரிந்துரைகளை நிறைவேற்றிட வேண்டும்.மீண்டும் மீண்டும் அவர்களது வாரிசுகளை ஏதேனும் ஒரு சாதியில் திணிப்பது சாதி ஒழிப்பிற்கு உதவாது.
• அவர்களின் குழந்தைகளுக்கு தாய் / தந்தையின் சாதியை போடவேண்டும். குழந்தைகள் பெரியவரானதும் அவர்கள் விருப்பப்படி தாய் அல்லது தந்தையின் சாதி அல்லது சாதியற்றோர் என சான்றிதழ் வழங்கிட வேண்டும்.
• சாதி கடந்த திருமணம் செய்து கொண்டோரில் ஒருவர் தலித்தாகவோ பழங்குடியினராகவோ இருந்தால் இணையரில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
• மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது சாதி கடந்த திருமணம் செய்துகொண்டோரின் எண்ணிக்கை மற்றும் இதர புள்ளிவிவரங்களைசேகரிக்க வேண்டும்.
• சாதிகடந்த திருமணம் செய்துகொண்டோருக்கு சமூக – பொருளாதார பாதுகாப்பு வழங்கிடவும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
• அவர்களுக்கு என ஒரு தனி வாரியத்தை உருவாக்க வேண்டும். 
• சாதி கடந்த திருமணம் புரிந்தோருக்கு ரேஷன் கார்டு, சமையல் எரிவாயு இணைப்பு உடனடியாக வழங்கிட வேண்டும்.
• இலவச வீட்டு மனை பட்டா அல்லது குடியிருப்புகள்வழங்க வேண்டும்.
• வட்டி இல்லாத கடன் தொழில் தொடங்கிட வழங்க வேண்டும்.
• அவர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்படும் கலப்பு மண உதவி நிதியை ரூ 2 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.
• காதல் கடந்த திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடங்கல்களை போக்க வேண்டும்.தனிப்பதிவாளர்களை நியமிக்க வேண்டும்.பதிவு அலுவலகங்களில் உள்ள ஊழல் முறைகேடுகள் களையப்படவேண்டும்.சாதிகடந்த திருமணம் செய்யும் இணையரை இழிவாக நடத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• சாதி ஆணவக் கொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும்.
• சமூக வலைதளங்களில் சாதி வெறியை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் செய்யாமல் சாதி கடந்து மணப்போரை சாகடிப்பது நியாயமா? நாமும் சாதி கடந்த திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற மன நிலை இளைய தலைமுறை மத்தியில் ஏற்படும் வகையில் சாதிகடந்த திருமணம் செய்துகொண்டோரின் வாழ்வை மேம்படுத்த மத்திய – மாநில அரசுகள் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த வேண்டும்.
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
மாநிலக் குழு உறுப்பினர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.
09940664343.
நன்றி; ஜன சக்தி 17.03.16